Pages

August 30, 2013

மித்ராவின் புரிதல்கள்

மித்ரா பிறந்து 2.5 வருடம் கழித்தே மீண்டும் வேலைக்கு போகலாம் என்று முடிவு பண்ணி அவள் கிட்ட பேச ஆரம்பிச்சேன் ...
பப்பு...
 அம்மா ஆபீஸ் போகட்டா ?
ஏன்  ம்மா?
ம் .. அம்மாவும் வேளைக்கு போனா இன்னும் கொஞ்சம் சம்பளம் வருமே...(அவளுக்கு அப்பா ஆபீஸ், சம்பளம்  எல்லா வார்த்தைகளும் கொஞ்சம் அர்த்தத்தோடு புரியும்)

சரி அப்போ என்னை யார் பாத்துப்பா ?

அப்போது தான் ஊரில் இருந்து வேலைக்கு யாரையாவது கூட்டிட்டு வரலாம் என்று  நினைத்து இருந்தேன் .. சில பல காரணங்களால் என் மாமியார் வர மாட்டார்கள் ...)

வேற யாரவது அத்தை  இல்ல ஆயா வந்து பாத்துபாங்கடா
எனக்கு daycare இல் விட மனசு இல்லை .. நம் வீட்டில் இருக்கும் சுதந்திரம் கண்டிப்பாய் வராது ... அதுவும் அங்கே எப்படி பார்த்து கொள்கிறார்கள்., ஏதும் பிரச்னை என்றால் சொல்லும் வயதும் இல்லை...

ஒரு வழியாய்  வேலைக்கு ஆள் கிடைத்து , எனக்கு வேலை கிடைத்து .. ஒரு 1.5 நன்றாய் ஓடியது .. முடிந்தவரை வீட்டில் இருந்து வேலை பார்த்து , லேட்டாய்  போய்  சீக்கிரம் வந்து .. இப்படியே சமாளித்து ஆயிற்று...

இன்னும் கொஞ்சம் வளர்த்து பின்னாடி , 3, 3.5 வயசுல .. அம்மா என்னை  ஸ்கூல்  லேர்ந்து  நீயே வந்து  கூட்டிட்டு போ... என் கூட தூங்கு .. இப்படி நிறைய எதிர்பார்ப்புகள்...


எனக்குமே அவளுக்கான நேரத்தை திருடுகிறோமோ  என்ற சின்ன உறுத்தல் , வருமானத்திற்கு வேறு வழியை யோசிக்க ஆரம்பித்து... என் எண்ணத்துக்கு "Technical Training " பக்கம் போகலாம் ன்னு முடிவு பண்ணி ...
இதோ வேலை விட்டு  கிட்ட தட்ட 5 மாதங்கள் ஆகிறது ..

மாதத்திற்கு அதிக பட்சம் 5 /10 நாட்கள்  வெளியே போவேன் .. இப்போது அருகில் உள்ள ஒரு பள்ளி /குழந்தைகள் காப்பகத்தில் அந்த நாட்களில் மட்டும் விடுகிறேன் .. அதுவும் அந்த பள்ளிக்கு மித்து , கோடை விடுமுறை  பயிற்சிக்கு (மற்ற குழந்தைகளுடன் பழக  மட்டுமே- Just  to be with other kids -No Training  ) சென்றதால் அங்கு உள்ள ஆசிரியர்கள் பிடிக்கும்

அதுவும்  ஒரு வாரம் முன்பே சொல்லி வைத்து  அவளுக்கு புரிய வைத்து விடுவேன் ...

August 1, 2013

அம்மா உங்கா.... வேணும்

மித்ரா  சூள்  கொண்ட போதே  , குழந்தை பிறந்த பின் வேலையை தொடர போவதில்லை என்று முடிவு செஞ்சாச்சு .. சிவாவிற்கும் என் முடிவில் திருப்தியே ...

மித்ரா பிறந்து என் கையில் கொடுத்தவுடன் நான் அவளிடம் முதலில் பேசியது , சொன்னது .. "you  are my best friend Chellam " அன்றிலிருது இதோ நாலரை வயது வரை அப்படியே நடந்தும் , நடத்தியும் வருகிறேன் ..

அவள் பிறந்து 2 மணி நேரம் கழித்தே நான் என் அறைக்கு வர முடிந்தது .. அவள் முதன் முதலில் பால் உறிஞ்சிய அந்த மணி துளி இன்னும் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது ....

எல்லா மருத்துவ மனைகளிலும் செவிலியர்கள் வந்து தாய்க்கு குழந்தையை எப்படி பிடிக்கணும் , எப்படி பால் கொடுக்கணும் ன்னு  சொல்லி கொடுப்பாங்க ..
என்னை பொறுத்தவை ..தாயின் உள்ளுணர்வே அதை  சொல்லி கொடுத்து விடும் 

நல்ல உணவு , தாயின் மன நிலை இவை இரண்டும் தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் .. 

நம் பெரியவர்கள் , உண்ணும் உணவையே மருந்தை பார்த்தவர்கள் ..

பூண்டு , பால் சாதம் , கீரை , இவை எல்லாம் நான் அனுபவத்தில்  அறிந்து கொண்டது ..

மூன்று வேலையாக  சாப்பிடாமல் ஐந்து வேலையாக  சாப்பிடனும் 

பால் குடுக்க எந்த கால அளவும் கிடையாது , 
குழந்தை உரிவதை நிறுத்தி விட்டால் , வேறு பக்கம் மாற்றி பார்க்கலாம் , அப்போதும் உரியவில்லை என்றால் விட்டு விடலாம்

படுத்து கொண்டோ , தொலை /அலை பேசியில் பேசியில் பேசி கொண்டோ  பால் கொடுப்பதை தவிர்க்கவும் 
பால் கொடுக்கும் நேரம் மிக முக்கியமானது .. அதை  தாய்க்கும்  குழந்தைக்கும் நல்ல புரிதலை உருவாக்கும் நேரமாக பயன்படுத்துங்கள் , 

மித்ரா பிறந்த நாளில் இருந்தே , சொல்ல போனால் வயிற்றில் இருக்கும் போதே அவ கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன் ... பால் குடிக்கும் பொது  பாடுவேன் , கதை சொல்வேன் , இல்லை பொதுவாய் .. இன்னைக்கு என்ன சமைக்கலாம் ,அடுத்தது என்ன பண்றது , எங்க போகலாம் , இல்லை நண்பர்கள் , வேற குழந்தைகள் இப்படி எதாவது எனக்கும் அவளுக்கும் கேட்கும் படி பேசுவேன் ... 

 அதே போன்று நல்ல தூக்கத்தில் இதுவரை நான் பால் கொடுத்ததே இல்லை , இரவில் அவள் லேசை அசைந்தாலோ , சினுங்கினலோ , எழுந்து அவளை கையில் எடுக்கும் போதே  லேசாய் முழித்து விடுவாள் .. அந்த நேரத்தில் தான் கொடுத்து பழக்கம் .. 
 
 மித்ரா பிறந்தது முதலே , நிறைய வெளியில் கூட்டி கொண்டு போய்  பழக்கம் ...
வெளியே போகும் பொது முதல் 6 மாதம் , நமக்கு சாப்பிட எதாவது , பழம் ,ரொட்டி .. தண்ணீர்...அப்புறம் முக்கியமாய் நல்ல பெரிய துண்டு  அல்லது பருத்தி துப்பட்டா .. 
எங்கே இருக்கிறோம் என்று கவலை படாமல் ஓரளவு மறைவான இடத்தில பால் கொடுக்கலாம் 

நான் எனது தோழிகளுக்கு எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்று தான் ..
நாம் எப்போது வேண்டுமானாலும் , வேலைக்கு போகலாம் , பணம் சம்பாதிக்கலாம் ....
ஆனால்  குழந்தையின் முதல் ஒன்று , இரண்டு வருடங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம் .. அதுவும் தாய்பால் கொடுக்க வேண்டிய முதல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை , தயவு செய்து குழந்தைக்காக  மற்ற எல்லாவற்றியும் தள்ளி போடுங்கள் ...

தாய் பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை .... அதை தட்டி பறிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை ....
தோழர்களே .. உங்கள் மனைவி  , அக்கா , தங்கைகள்  தோழிகள்  தாய் பால் கொடுப்பதை ஊக்குவியுங்கள் ,ஆதரவாய்  இருங்கள் ..

தாய்மார்களே .. தாய் பால் கடவுள் கொடுத்த வரம் ... அதை சரியாய்  பயன்படுத்துங்கள்  
 




மீண்டும் தொடர்கிறேன்

நிறைய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவுலகின் பக்கம் ... இனி என்ன வேலை  இருந்தாலும்  எழுதுவதை  தொடர்வது என்ற முடிவுடன் ...

எழுத ஆரம்பிக்கணும்னு  நினைச்சவுடனே   முதல்ல நினைவுக்கு வந்தது " இந்த வாரம் உலக தாய்ப்பால் வாரம் " 

நேத்து விகடன்ல வந்த ஒரு கட்டுரையை (ஒரு மருத்துவர்  சொன்ன கருத்துகள் ) முக நூலில் பகிர்ந்து இருந்தேன் ..அதை இங்கும் பதிவிட விரும்புகிறேன் ...

அதை தவிர ஒரு தாயாய் ... என் குழந்தைக்கு இரண்டு வயது வரை இனிக்க இனிக்க தாய் பால் குடுத்த நினைவலைகளை  , நான் கேட்டு , படித்து , அனுபவபூர்வமாக  உணர்ந்தவைகளை பகிரவும்....
 அடுத்த பதிவில்  தொடர்கிறேன்


கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் தாய்ப்பால்!
தாய்ப்பால் வாரம்... சிறப்புக் கட்டுரை!

இப்படித்தான் தாய்ப்பால் பற்றிய உண்மைகளைத் தெரியாதவர்கள், அதன் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள் எல்லாம், இஷ்டம்போல ஆலோசனைகளைச் சொல்லி, இயல்பாக நடக்க வேண்டிய ஒவ்வொன்றுக்குமே, செயற்கையான விஷயங்கள் மற்றும் பொருட்கள் மீது கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்'. இந்தச் சமயத்தில் தாய்ப்பால் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரை அளித்தால், பிரசவிக்கும் இளம் தாய்மார்களுக்கு வழிகாட்டியாக இருக்குமே!''

- மதுரையைச் சேர்ந்த வாசகி அகிலாவின் இந்தக் கடிதத்தை, சென்னை, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆர்.எஸ். முன் வைத்தோம். ''இத்தனை இடையூறுகளுக்கு இடையேயும் தன் கடமையில் உறுதியாக இருந்து, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வாசகி பாராட்டுக்குரியவர்!'' என்று சொன்ன டாக்டர், தாய்ப்பால் சுரப்பு பற்றிய விளக்கத் தகவல்களை வழங்கினார்.

ஹார்மோன் தூண்ட, தாய்ப்பால் சுரக்கும்!

''முதலில் நான் வலியுறுத்த விரும்புவது, தாய்ப்பால் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். 'ஒல்லியான தாய் என்பதால் பால் சுரக்கவில்லை’, 'குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் பால் போதவில்லை’ என்ற பேச்சுக்களில் எல்லாம் துளியும் உண்மையில்லை. குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருந்து, 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்’ என்று உளப்பூர்வமாக நினைக்கும்போது, அந்தச் செய்தி மூளைக்கு தெரிவிக்கப்பட்டு, ஆக்சிடோஸின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்பதற்கு மிக முக்கியமானது. மாறாக, குழந்தை பெற்றெடுத்த தாயின் மனநிலை அமைதியில்லாமல் இருந்து, குழந்தைக்குப் பாலூட்டுவது பற்றிய நினைப்பில்லாமல், விருப்பமில்லாமல் இருந்தால், ஹார்மோன் சுரக்காது, தாய்ப்பாலும் சுரக்காது. எனவே, பிரவசத் தில் உடல், மன ரீதியாக துன்புற்று வந்திருக்கும் பெண்ணுக்குத் தேவையான அன்பையும், அமைதியையும் உடனிருப்பவர்கள் தரவேண்டும்.

பிரசவித்த தாய்மார்களுடன் உதவிக்காக இருப்பவர்கள், 'பெண் குழந்தையா போச்சு’, 'ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு’, 'உனக்கு பால் இல்ல’, 'குழந்தையைத் தூக்கக்கூடத் தெரியல’ போன்ற புலம்பல்களை வெளிப்படுத்துபவர் களாக இருக்கும்பட்சத்தில், அவர்களை அங் கிருந்து மெதுவாக வெளியேற்றுவதே நல்லது.

மார்பகக் காம்பு... கவனம்!

குழந்தை பெற்ற தாய் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சுத்தம், மார்பகக் காம்புகள் சுத்தம் மற்றும் சத்தான உணவு. உடல் சுத்தம், சத்தான உணவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், மார்பகக் காம்பு சுத்தத்தை பொறுத்தவரை பல பெண்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகளுக்கு உரிய பராமரிப்பை தரவேண்டும். காம்பில் புண், பிளவுகள் ஏதாவது இருந்தால் கர்ப்ப காலத்தில் செக்கப் செல்லும்போதே மருத்துவரிடம் தெரிவித்து, சிகிச்சை எடுக்கவேண்டும். சிலருக்கு இயல்பிலேயே காம்புகள் உள் அமுங்கி இருக்கும். இது குழந்தைக்கு பால் குடிக்க ஏதுவாக இருக்காது. அதனால் கர்ப்ப காலத்தில் இருந்தே குளித்து முடித்தபின் மிருதுவாக காம்புகளை வெளியே இழுத்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது பிரசவ நேரத்தில் காம்புகள் குழந்தை சப்புவதற்கு ஏதுவாக வெளிவந்திருக்கும்.

சீம்பால் முக்கியம்!

குழந்தை பிறந்ததும் சுகப்பிரசவமாக இருந்தால் அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியனாக இருந்தால் தாய் மயக்கத்தில் இருந்து கண் விழித்த பிறகு, அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு உடல் நிலைக்கு தேறிய பிறகு பால் புகட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின் முதன் முதலில் தாய்க்கு சீம்பால் (கொலோஸ்ட்ரம்) சுரக்கும். இது குறைவான அளவே சுரக்கும் என்றாலும், பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் 5 முதல் 7 மில்லி பாலையே தாங்கும் என்பதால், அந்த அளவே குழந்தைக்குப் போதுமானது. அதனால் முதல் நாளில், 'ஐயோ பால் குறைவா இருக்கே’ என்று கவலைப்பட வேண்டியதில்லை.

பிரசவத்துக்குப் பின் தாய் ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் பால் சுரக்கும் என்பதிலும் உண்மையில்லை. பொதுவாக, பிரசவித்த தாய்க்கு பால், இளநீர் என்று கொடுக்கச் சொல்வது, பிரசவம் எனும் பெருநிகழ்வு முடித்து வந்திருக்கும் அவர் உடலுக்கான தெம்புக்காகத்தானே தவிர, பால் சுரப்புக்காக இல்லை. எனவே, பிரசவத்துக்குப் பின் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், பால் சுரப்பு நிகழும் என்பதுதான் இயற்கையின் கொடை.

அச்சப்பட வேண்டியதில்லை அழுகைக்கு!

அடுத்ததாக, குழந்தை அழுவதைப் பார்த்துப் பதற்றப்படும் தாய்மார்கள் அநேகம். பசிக்காக அழுகிறதோ என்று நினைத்து, பால் புகட்டுவார்கள். ஆனால், பசியாறிய பின்னும் குழந்தை அழும். 'பால் பத்தலையோ’ என்றும் மீண்டும் கவலைப்படுவார்கள். காரணம் அதுவல்ல. அதுவரை தாயின் வயிற்றில் இருட்டறையில் இருந்த குழந்தைக்கு, வேளாவேளைக்கு கேட்காமலேயே ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால், வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிச்சம், சத்தம் போன்றவை எல்லாம் புதிதாக இருப்பதாலும், பசித்து அழுதால்தான் பால் கிடைக்கும் என்பதாலும், பிறந்த ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்தோ, விட்டு விட்டோ குழந்தை அழுவது இயல்பே. அழும் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அதற்குப் பின்னும் அழுதால், பதற்றமோ கவலையோ வேண்டாம். கருவறைக்கு ஒத்த பாதுகாப்பாக, தாயின் அரவணைப்புக்குள் குழந்தையைக் கொண்டு வாருங்கள். அழுகை சில நாட்களில் சரியாகிவிடும்.

பால்சுரப்பு அதிகரிக்க..!

அடுத்ததாக, பிரசவத்தை தொடர்ந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போம். குழந்தை தாய் மார்பை சப்ப சப்பதான் பால் சுரப்பு அதிகமாகும். எனவே, தாய்ப்பால் குறைவாக இருக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து குழந்தைக்கு பால் புகட்டியபடியே இருங்கள். அது பால் சுரப்பை தானாகத் தூண்டும். ஒருவேளை சிலருக்கு மிகமிகக் குறைந்த அளவே பால் சுரப்பு உள்ளது அல்லது சுரக்கவே இல்லை (இது மிக அரிதாகவே நிகழும்) எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தத் தாய் பால் சுரப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர்,

தாய்ப்பாலின் இணையில்லா சிறப்புகள்!

தாய்ப்பால் உன்னதமானது, சுத்தமானது, சத்துக்கள் நிரம்பியது. தாய்ப்பாலில் எனர்ஜி, புரோட்டீன்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளதுடன், இது நிமோனியா, டயரியா, அலர்ஜி போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிற எதிர்ப்பு சக்தியினை தரவல்லது. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்ற பால் அருந்தும் குழந்தைகளைவிட திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலை தருவதில்லை. ஆனால், நாம் மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை அபகரித்துத் தருகிறோம். பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்ன பிற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். இதன் விலையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி என குழந்தைகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படலாம்.

எனவே, எண்ணிலடங்கா மற்றும் ஈடு இணையற்ற சத்துக்கள் நிரம்பிய தாய்ப்பாலை தங்கள் குழந்தைக்குக் கிடைக்கச் செய்வது ஒவ்வொரு தாயின் கடமை. ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல... பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது. மேலும், தாயின் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பவும் பாலூட்டுவது அவசியமாகிறது'' என்று வலியுறுத்திய டாக்டர்...

''மொத்தத்தில் கருவுற்றிருக்கும்போதே, 'என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மட்டுமே தருவேன்’ என்கிற அன்பையும் உறுதியையும் தாய்மார்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று அன்பான அறிவுரையையும் தந்தார் முத்தாய்ப்பாக!



நன்றி : விகடன்