Pages

December 2, 2011

Thank You Amma

இன்னைக்கு ஒரு இனிய அதிர்ச்சி.. இப்போ பாலர் பள்ளி போக ஆரம்பிச்சதுலேர்ந்து மித்ரா கொஞ்சம் நிறைய வாக்கியங்கள் பேசுறா. ஆங்கிலமும் கொஞ்சம் நிறைய புது வார்த்தைகள் பழகி இருக்கா .

நேத்து சாயந்திரம் கொஞ்ச தூரம் நடந்து போய்ட்டு திரும்பி வர வழியில கேக் வாங்கினோம் ..

முதல் வாய் ஊட்டினேன் . வாயில வாங்கிட்டு " Thank You Amma " ன்னு சொன்னா. .... இது தான் முதல் தடவை அம்மு thank You சொல்றது.

எதுக்குடா thank you சொன்ன?

.. அம்மா ஊட்டி விட்ட இல்ல அதுக்குதான் சொன்னேன் ...


ம் இன்னைக்கு காலையிலேர்ந்து எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சிட்டோம் ..கூடவே welcome சொல்லி குடுக்குறேன் ...

November 12, 2011

BOY & GIRL

போன வாரம் தான் மித்ராக்கு BOY /Girl வித்தியாசம் சொல்லி குடுத்தேன் ..

அப்பா ,பெரியப்பா , அண்ணன் , மாமா எல்லாம் குட் பாய் ..

அம்மா , மித்ரா , சந்தியா , கோமளா , நந்தினி எல்லாம் குட் கேர்ள் ...

இப்டி அவ பாத்து பழகின நபர்களை வச்சே சொன்னேன் .. நோ ரியாக்க்ஷன் ..


இன்னைக்கு ..

அம்மா நல்ல பொண்ணு ...

மித்ரா கூட நல்ல பொண்ணு ..

அப்பா நல்ல பொண்... இல்லை இல்லை குட் பாய் ... அப்பா பாய் தானேம்மா ?


அவளோட ஞாபக சக்தி நெனெச்சு சில சமயம் ஆச்சர்யமா இருக்கு ...

மித்ரா @ Schooby Dhoobie & அம்மா @ CALSOFTLABS

சிங்கபூர்லேர்ந்து வந்து மூணு மாசம் ஆச்சு. இங்க வந்ததுலேர்ந்து மித்ரா ஸ்கூல் போலாம்ன்னு சொல்லிட்டே இருந்தா...
 
வேலைக்கு போகணும் ன்னு முடிவு பண்ணதுமே பாப்பா கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டேன் ... அம்மா வேலைக்கு போனா சாயந்திரம் தான் வருவேன் .. பாப்பா ஸ்கூல் போய்ட்டு வந்து சமத்தா விளைடிட்டு , தூங்கி எழுந்தா அம்மா வந்தேடுவேன் .. அப்படின்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன் .. சில சமயம் சரி சொல்லுவா .. ஆனா நிறைய தடவை வேணாம் போ ன்னு தான் சொல்லிவா...

போன வாரம் தான் வேலை கிடைச்சது .


இப்போதைக்கு வீடு மாற வேணாம் ன்னு முடிவு பண்ணி பக்கத்துலேயே play ஸ்கூல் போய் பாத்துட்டு வந்தோம் . ஓரளவிற்கு நல்லாவே இருந்துச்சி ..
சரி ன்னு செவ்வாய் கிழமை போய் பணம் கட்டிட்டு வந்தேன் ..

புதன் கிழமை நல்லா தான் விடிஞ்சுது .. பால் குடிச்சு , புது டிரஸ் போட்டு , bag மாட்டி கிளம்பிட்டா ...

ஸ்கூல் வாசல் போனவுடனே மேடம் க்கு மனசு மாறிடுச்சு .. அம்மா ஸ்கூல் வேணாம் ம்மா ன்னு ஒரே அடம் .. ஒரு வழியா பேசி பேசி .. நான் வெளியவே உட்கார்ந்து இருக்கேன் ன்னு சத்தியம்  எல்லாம் பண்ணி .. உள்ள அனுப்பினா ... பத்தாவது நிமிஷம் பயங்கர அழுகை ...

வேற வழி இல்லாம சீக்கிரம் கூட்டிட்டு வந்தேன் ...

வியாழகிழமை ..................

எல்லாம் ரெடி .. ஸ்கூல் போய் அழ மாட்டேன் ன்னு திருப்பி திருப்பி சொல்லிகிட்டே வந்தா.. ஆனா வாசல் போனவுடனே அம்மா போகாதே போகாதே ன்னு அழுகை .. மனசை தேத்திட்டு வெளிய வந்துட்டேன் .. அரை மணி நேரம் கழிச்சு போய் பாத்தா ஒரு மாதிரி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சு இருந்தா ...1 மணி நேரம் கழிச்சு அவங்களே இன்னைக்கு போதும் ன்னு போக சொல்லிட்டாங்க ..

வெளிய வந்தவ வீர நடை போட்டு எனக்கு முன்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டா.


அம்மா ... அம்மா....

சொல்லுடா..

நீ ஆபீஸ் போக போறியா?

ஆமாம் செல்லம்மா ...

ம் போ போ .. நான் ஸ்கூல் போறேன் .. நீ ஆபீஸ் போ .. அடம் பண்ண மாட்டேன் ..


வெள்ளிகிழமை ....

சீக்கிரம் எழுந்து மதியத்துக்கு சமச்சி வெச்சுட்டு பாப்பாவை ரெடி பண்ணியாச்சு ... மனசுக்குள்ள ஒரே பயம் .. எப்படி என்னை விட்டிட்டு 7 /8 மணி நேரம் இருக்க போறா?...

ஸ்கூல் போகும் போதே பயங்கர அழுகை .. அவங்க அப்பா லீவ் போட்டு கூட இருக்கிற தெம்பில் கிளம்பியாச்சு ...

10 .30 :

சிவா பாப்பா அழுறாளா?

வீட்டுல இருக்கேன் . ஸ்கூல் போய் பாக்குறேன் ..

மனசுக்குள்ள பக் பக் ...

11 .00

ஸ்கூல் போனா , என் கூடவே வந்துட்டா..

அழழையா?

இல்லை .. இரு பேச சொல்றேன் ...

....

..

அம்மா ..

கன்னுக்குட்டி ..

அம்மா ஆபீஸ் போய்டியா?

ஆமாம் டா..

சரி ம்மா .. சீக்கிரம் வந்துடு ...


ஹப்பா.. அந்த நிமிஷம் மனசுக்குல வந்த சந்தோசம் வார்த்தையால சொல்ல முடியாது


சாயந்தரம் குள்ள 3 தடவை போன்ல பேசினேன் ... ஒரு சின்ன அடம் , அழுகை கூட இல்லை ..

இந்த வயதில் எப்படி வந்தது இத்தனை புரிதல் ?....


திங்கள் கிழமை ..

நினைக்கவே பயம்மா  தான் இருக்கு ... நாங்க ரெண்டு பேரும் இல்லாம ஆயா கூட எப்டி இருக்கா போறா?

November 3, 2011

ரிப்பீட்டு...........

நேத்து படுக்க போறதுக்கு முன்னாடி அப்பா யானை விளையாடலாம் ன்னு ரொம்பவே அவங்க அப்பாவை படுத்தினா

நான் : பப்பு அப்பா ஆபீஸ் போய்ட்டு வந்தாங்க இல்ல ? ரொம்ப டையர்டா இருக்காங்க ..தொந்தரவு பண்ணாதே ...

பப்பு :ம் .....

...

....

நான் : மித்ரா ...

பப்பு : பாப்பா ஆபீஸ் .. இல்லை இல்லை ஸ்கூல் போயிட்டு வந்தேன் இல்ல .. ரொம்ப டையர்டா இருக்கு .. தொந்தரவு பண்ணாதே ...

வேலை கிடைச்சிடுச்சு......................

வேலை தேடும் படலம் ஆரம்பிச்சு இன்னையோட 16 நாள் ஆச்சு. கிட்டத்தட்ட வேலை கிடைச்சிடுச்சு... (உத்தரவு கடிதத்திற்காக காத்திருக்கிறேன் ) .. ஆனா இனி வரும் நாள்கள் நினைச்சா கொஞ்சம் பயம்மா இருக்கு .. எப்டி மித்தா என்னை விட்டுட்டு 8 + மணி நேரங்கள் இருக்க போறா? அதை விட நான் எப்டி இருக்க போகிறேன் ?


இனி அடுத்த கட்ட வேலைகள் .. ஏற்கனேவே வேலைக்கு வந்த பொண்ணு சொல்லாம போய்டுச்சு ... இனி அடுத்த ஆள் தேடனும் .. பப்புக்கு நல்ல பள்ளிக்கூடம் தேடனும் ... அதை பொறுத்து வீடு மாத்தனும். .இப்போவே கண்ணை கட்டுதே ...

ஆரம்பத்தில் அம்மா ஆபீஸ் போகட்டுமான்னு பப்பு கிட்ட கேட்ட " ம் போ வேணாம் " அப்டின்னு சிணுங்குவா.. இப்போ கொஞ்சம் பரவ இல்லை .. அம்மா ஆபீஸ் போய் சீக்கிரம் வந்துடு ன்னு சொல்ற அளவுக்கு புரிஞ்சுகிட்டா ..

Telephonic interviews ஆப்போ பப்பு ரொம்ப சமத்தா இருந்தா.. எந்த விஷயத்தையும் அவளுக்கு புரியற மாதிரி ஒன்னுக்கு ரெண்டு தடவை சொன்ன ரொம்பவே ஒத்துழைகிரா ...

October 20, 2011

சிங்கை to இந்தியா

சிங்கையில் இருந்து இந்தியா வந்து 2 மாசம் ஆயாச்சு . பெங்களூரில் வீடு பார்த்து குடியேறியும் ஆச்சு. இப்போ வேலை தேடும் படலம் .
இரண்டரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் Naukri , resume ,J 2 EE ... எதோ ஒரு புது உலகிற்குள் வந்து விட்ட உணர்வு .


இந்த இரண்டு மாதத்தில் மித்ரா கற்றுக்கொண்டது ஏராளம் . நிறைய புது வார்த்தைகள் , உறவுகள் , நிகழ்வுகள் .. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு ... சீக்கிரம் எழுதுகிறேன்


கால் கிலோ கருப்பு புளி

மஞ்சதூளுடா ....


மித்ரா இப்போ ரொம்ப ரசிக்கிற விளம்பரம்

July 19, 2011

... ...கூடாது

கொஞ்ச நாளா மித்ரா அடிக்கடி "சொல்ல கூடாது " ,தொட கூடாது, பேச கூடாது " அப்டின்னு ரொம்ப அழுத்தமா சொல்லற அழகே தனி,..

அதுவும் பாத் ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு " அம்மா door close " பாக்க கூடாது , Toilet தொட கூடாது " அப்டின்னு சொல்றா
 
--------------------------------------------------------------------------------------------------------
...அப்போ
என் மொபைல் எடுத்து
யாரு ? அப்பா ஆபீஸ் போயச் see You Bye
இப்போ ....
 
 
ஹெலோ .. யாரு? மாமாவா?
ம் ஓகே .. சரி ...
இந்தியா போறோம் ...
Flight ல...
அப்புறம் பேசுறேன் ..
Bye ...
யாரும் சொல்லி தராமலேயே நிறைய கூர்ந்து கவனிக்கிறாள்..

July 12, 2011

பாப்பா தண்ணில தொப்!!!!

மித்ராவிற்கு கண்டிப்பாக நீச்சல் கற்று குடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முன்னமே முடிவு செய்து இருந்தோம். அதனால் தண்ணீரை பற்றிய பயம் தெளிய வேண்டும் என்பதற்காக 1.௨ வருடத்திலேயே அவளை இங்கே இருக்கும் நீச்சல் குளத்திற்கு மதம் ஒரு முறையாவது கூடிக்கொண்டு போவது வழக்கம் .நமக்கு இன்னும் தண்ணீர் என்றாலே பயம் .

முதல் தடவை போகும்போது நீரில் கால் வைப்பதற்கே 20 நிமிடங்கள் ஆனது. அடுத்தடுத்த முறைகளில் நிறைய மாற்றங்கள் . இப்போ எல்லாம் சனிகிழமை வந்தாலே "அப்பா.. Swimming Pool போலாம் Okey ?" என்று ஆரம்பித்து விடுகிறாள்..அங்கே போய் என்ன பண்லாம் என்று கேட்டால் " பாப்பா தண்ணில தொப் " என்று உடனே பதில் வரும் .


மித்ரா வழிகள் எல்லாம் கொஞ்சம் நல்லாவே ஞாபகம் வைத்து கொள்கிறாள் . Serangoon MRT இறங்கி வெளியில் அந்த குறுகிய படிகளை பார்த்த வுடனேயே "தம்பி பாக்க போறோம் " அப்டின்னு சரியாய் சொல்லுவாள் . அதே போல் நீச்சல் குளம் இருக்கும் அந்த Sports Complex க்கு நாங்கள Shuttle விளையாட போவோம் . அந்த இடத்தை பார்த்தாலே தண்ணி தண்ணி என்று ரொம்பவும் குஷி ஆகி விடுவாள் . அன்றைக்கு போகும் முடிவு இல்லை என்றால் நிறைய காரணங்கள் சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கும் .

ஆனால் நிச்சயம் தவறான விஷயங்கள் சொல்லி பயமுறுத்த கூடாது என்பதில் நான் ரொம்ப கண்டிப்பாக இருக்கிறேன் .உதாரணமாக பூச்சாண்டி , பூனை வருது என்பது போல சொல்வது இல்லை ... முடிந்த வரை பொருத்தமாக பதில்கள் சொல்லியே இது நாள் வரை சமாளித்தும் வருகிறேன்

லிட்டில் மித்ரா wants to Play

மித்ராவிற்கு அவ்வபோது சில மிக பிடித்த பாடல்களோ இல்லை விளையாட்டோ இருக்கும்.

அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருப்பாள்.

ஒரு வாரமாக "Rain Rain Go Away " பாடு பாடிக்கொண்டே இருக்கிறாள் . சில சமயம் Jonney க்கு பதிலாக "லிட்டில் மித்ரா wants to Play " என்று மாற்றி padukiral . இப்படி .. நிறைய விஷயங்களில் தன்னை முன்னிலை படுத்த ஆரம்பித்து விட்டாள்.

July 1, 2011

Life Management Skills

Some practical techniques for improving mathe-logical, sequential and analytical skills (they need to be practiced continuously for a long time to get results)

 • Analyse and solve a technical problem. Ask for instructions and write them down systematically.
 • Read and try to understand a budget/ financial report.
 • Calculate a monthly salary, how much it means per minute/second.
 • Learn a new computer program (not game).
 • Define your goals for next year, next decade and for your entire life.
 • Prepare a ‘Time log’ on daily basis and monitor how much you are implementing it.
 • Organize your filing system, desk, cupboard.
 • Be on time for appointments, calculate time for travel, each task, etc.
 • Write detailed job description of small and simple tasks of everyday life.
 • Use logic, explore probabilities, analyze data in decision-making.
 • Find out how a machine (frequently used) works.
 • Review rationally a recent impulsive decision that you took (e.g. you just turned from your regular route and went to a friend’s house).
 • Play logic or number games, practise Sudoku, mind puzzles in magazines or books.
 • Assemble a model kit by following instructions.
 • Prepare personal budget for everyday expenses. Do cash handling.
 • Prepare personal property list of all the things you own, classify them category wise.
 • Write down expiry dates of driving licence, insurance, due dates for bills etc., and calculate number of days left.
 • Find out meanings of some new terms, words, whenever you come across them.
 • Vigorous jogging, preferably early morning.
 • Give and take directions to go to a new place with step-by-step instructions, and see how accurate it was.
 • Do forecasting of how a proposed cricket match, stock market, or election result will go, write down your logical steps for your prediction, and match with actual results.
 • Make a habit of writing neatly, fitting correctly into place, and highlighting/underlining important points.
வலை தளத்தில் படித்தது....

நிறைய விஷயங்களை செய்து பார்க்கலாம் ..பழக முடியுமா? ..தெரியவில்லை

June 29, 2011

பாப்பா சாப்பபை

மித்ராக்கு எப்பவும் சமையல் அறையில் ஏதாவது செய்வது ரொம்ப பிடித்த ஒன்று ...

நான் சப்பாத்தி மாவு பிசையும் பொது ஒரு சின்ன உருண்டை கையில் குடுப்பேன் . எப்பவும் அதை அப்டியே சாப்பிட்டு விடும் குட்டி இப்போ கொஞ்ச நாளா கையில வச்சு என்னை மாதிரியே அதை உருட்டி உருட்டி பார்க்கிறாள் .

இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு வந்தவுடனேயே நான் தட்டு எடுக்க போகும் போது சப்பாத்தி கல்லை பார்த்துட்டு பாப்பா சாப்பபை( சப்பாத்தி சொல்ல வராது)போடு அப்டின்னு மாவு கேட்டா... நானும் கொஞ்சம் மாவு எடுத்து குடுத்தேன் . அழகாய் கையால் உருட்டி உருளையால் தேய்க்கவும் செய்தாள்.

கொஞ்ச நேரம் தேச்சிட்டு " பாப்பா சாப்பபை வரலை " ன்னு சொல்லிட்டாள் .

 
 
அப்புறம் அதே மாவை வைத்து A , B , C , D செய்து கொஞ்ச நேரம் விளையாண்டோம்.வார்த்தைகளும் வாக்கியங்களும்

ஒரு 15 நாளா பப்பு கொஞ்சம் 3 அல்லது 4 வார்த்தைகள் சேர்த்து பேச பழகியாச்சு .அடிக்கடி பேசுவது

சொல் பேச்சு கேளு ....( அதை செய்தவுடன் குட் வேறே.. ..:-) )

லைட் போடு

ஐஸ் கிரீம் /Chocky வேணும்

பாப்பாக்கு தாகம் .. தண்ணி வேணும்

டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு

June 28, 2011

I am Back .....

ஒரு ரெண்டு மாசமா நிறைய வேலை... கொஞ்சம் சோம்பேறி தனம் .. இதுனால Blogs படிக்கவோ , எழுதவோ முடியலை .. இதோ மறுபடியும் வந்துட்டேன் ..

குட்டி க்கு இப்போ ரெண்டு வருஷம் 1 மாசம்..

தினம் தினம் ஏதாவது புது விஷயம் கத்துகிறா ... புது வார்த்தை, வாக்கியம் .. இல்லை ஏதாவது விளையாட்டு இப்டி ..

அதை எல்லாம் இந்த இடத்தில பகிர்ந்து கொள்ள போறேன் ... பின்னாடி மித்தா கூட பாத்து தெரிஞ்சுப்பா...

June 3, 2011

Birthday @ School

ஸ்கூல் பிரெண்ட்ஸ் க்கு எல்லாம் "goodie  Bag " வாங்கினோம் .. அதை Pack  பண்றப்போவே எல்லார் பேரும் சொல்ல ஆரம்பிச்சிட்டா...
ஸ்கூல்ல எல்லாரும் இவளுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன வுடனே பயங்கர சந்தோசம் .. எப்பவும் எல்லார் கூடவும் சேந்து  பாடரவ அன்னைக்கு அவளுக்கு தான் வாழ்த்து சொல்றங்கனு புரிஞ்சோ என்னவோ பாடவே இல்லை .. எல்லார் பேரும் சொல்லி சொல்லி gift  எடுத்து குடுத்தா...   

Birthday Specials - 2011

எனக்கு இந்த வருஷம் மே மாசம் ஆரம்பத்திலேர்ந்தே ஒரு கொண்டாட்டமான  மன நிலை வந்துடுச்சு..பப்பாக்கோ மார்ச் மாசத்திலேர்ந்தே ஒரே குஷி தான் .. மார்ச் மாசம் அவள் பிரெண்ட் லியா க்கு பிறந்த நாள் வந்தது தொடங்கி ஏப்ரல் , மே முழுசும் அவங்க பிரெண்ட்ஸ் பர்த்டே நிறைய வந்துடுச்சு.. அதுனால "ஹாப்பி பர்த்டே " பாட்டு, கேக் , Goodie Bag , Gift   அப்டின்னு எல்லாம் அவளுக்கு பழகிடுச்சு ....10  நாள் முன்னாடியே மே 26  மித்ராக்கு "ஹாப்பி பர்த்டே " அப்டின்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தோமா... ஒரு வாரமாவே அவளுக்கு பயங்கர சந்தோசம் .... எப்போ மே 26  என்னனு கேட்டாலும் "மித்தாக்கு ஹாப்பி டு யு " சொல்லுவா... ம் முக்கியமான  வார்த்தை "பர்த்டே " எப்பவும் மறந்து போய்டும் :-)

மித்ராவின் பிறந்த நாள்

மித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நல்ல படியா  முடிஞ்சது ...புகைப்படங்கள் இங்கே

March 21, 2011

குவா குவா வாத்து

 இப்போ எல்லாம் மித்ரா நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பிச்சுட்டா ... தெரிய விஷயங்களை "இது என்ன " அப்டின்னு  கேட்டு  தெரிஞ்சுக்கிற ஆர்வம் வந்து இருக்கு . கொஞ்சம் கோர்வையா வாக்கியங்கள் பேச ஆரம்பிச்சுட்டா ... இன்னைக்கு காலையில திடீர்னு " குவா குவா வாத்து குமணி (குள்ள மணி ) வாத்து .. அப்படின்னு பாடினா கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ...
கொஞ்ச நாளா போட்டோ பாக்குற ஆர்வம் ஜாஸ்தி ஆய்டுச்சு அப்பாவோட Iphone  ல பாட்டு கேக்குற நேரங்களை விட அவ தன போட்டோ மற்றும் தான் பேசின வீடியோ கேட்கிறதில்  தான் அதிகம் ஆர்வம் காட்டுறாள்.
 
A B  C  D  சொல்றதிலும் , one , two , three  , ஒன்று இரண்டு மூன்று , அ, ஆ சொல்றதிலும் ஆர்வம் ரொம்ப வந்துடுச்சி ... என்னை பொறுத்த வரை மித்ரா க்கு இந்த மாதிரி படிப்பை நான் உட்கார்ந்து சொல்லி குடுக்குறது இல்லை ... ஆனா மத்த படி பொதுவான விஷயங்களை தான் அவ கிட்ட நிறைய பேசுவேன் like  இசை , நாட்டியம் , ராகங்கள் விளையாட்டு இதை பத்தி தான் .....சில சமயம் மதியம்  சாப்பிடும் பொது அரசியல் கூட பேசுறது உண்டு
( ஹ ஹ ) 

February 24, 2011

சாதனை பெண்கள்

டாக்டர் அனிசா ராணி (இணைப்பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம்):
''என்னோட சொந்த ஊர், கம்பம். பி.எஸ்சி. தோட்டக்கலை தொடங்கி, பிஹெச்.டி. வரைக்கும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துலதான் முடிச்சேன். மூலிகைப் பயிரான சர்க்கரைக் கொல்லி, நெருக்கு நடவு, முந்திரியோட வீரிய ஒட்டு ரகம்னு நிறைய ஆராய்ச்சிகள் செய்தேன். குறிப்பா, முந்திரி விவசாயிகளோட வாழ்வாதாராம் மேம்பட நிறைய புதுரக பயிர் திட்டங்கள் வகுத்தேன். இதுக்குத்தான் விருது. என் முயற்சிகளை அங்கீகரிச்ச அரசாங்கம்... அந்த புராஜெக்ட்டை இப்போ செயல்படுத்த ஆரம்பிச்சிருக்கு. அரியலூரை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவுல முந்திரி நெருக்கு நடவு விவசாயம் பண்றதுக்கு மானியமும் கொடுத்திருக்கு அரசு!''
டாக்டர் கெசி செல்வா விஜிலா (முதல்வர், கிறிஸ்டியன் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்):
''பி.ஈ., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, எம்.ஈ., அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ் படிச்சேன். உதவிப் பேராசிரியர் வேலை, கல்யாணம், கணவர், குழந்தைகள்னு வாழ்க்கை நகர்ந்துச்சு. இதுல என் பிரசவம்தான், ஆராய்ச்சிக்கான விதையை எனக்குக் கொடுத்துச்சு.
'சிசேரியன் பிரசவங்கள் ஏன் அதிகரிக்குது?’ங்கற கேள்விக்கு, 'கர்ப்பிணி வயித்துல இருக்கற சிசுவோட இதய சிக்னலை (சின்ன ஸ்கிரீனில் சென்செக்ஸ் குறியீடு மாதிரி மேலும் கீழும் இறங்கித் தெரிவது) தனியா பிரிச்செடுத்து, அதை வெச்சு சிசுவோட உடல் நிலையைத் தெரிஞ்சுக்கறதுதான் பொதுவான நடைமுறை. இப்படி எடுக்கறப்போ தாயோட சிக்னலும் சேர்ந்து வரும்ங்கிறதால, சிசுவோட உடல் நிலையை சரியா கணிக்க முடியாது. அதனாலயும் சிசேரியன் நிலை ஏற்படுது'னு சொன்னாங்க. இதையே சவாலா எடுத்துக்கிட்டு, சிசுவோட சிக்னலை தனியா பிரிச்சு, சிசுவோட வளர்ச்சி, இதய குழாய் அடைப்பு எல்லாத்தையும் துல்லியமா கண்டுபிடிக்கற ஆராய்ச்சியில நான் ஜெயிச்சதுக்குத்தான் இந்த விருது!''
டாக்டர் ஜோதிமணி (உதவிப் பேராசிரியர், வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை):
''ஈரோடு மாவட்டம், சாலைப்புதூர்தான் பூர்விகம். விவசாயக் குடும்பம். பி.எஸ்சி. விவசாயம் படிச்சுட்டு, எம்.எஸ்.சி, பி.ஹெச்.டி எல்லாம் சூற்றுச்சுழல் பத்தி படிச்சேன். 'ஆலையில இருந்து வர்ற திடக்கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடா இருக்கு. அதை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியுமா?’ங்கறதுதான் என்னோட பிஹெச்.டி. ஆராய்ச்சி. கழிவுகளை சில நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மட்க வெச்சு, பயிர்களுக்கு உரமா பயன்படுத்தலாம்ங்கறதை பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நிரூபிச்சிருக்கேன்! அடுத்ததா, மத்திய அரசின் நிதியுதவியோட மனிதக் கழிவுகளை மேம்படுத்தி, உரமாக்கற ஆராய்ச்சி, நிலத்தடிநீர் மாசுபடுறதைக் கட்டுப்படுத்துற ஆராய்ச்சினு தீவிரமா இருக்கேன். சீக்கிரமே தீர்வுகளோட வருவேன்!''
டாக்டர் ஹேன்னா ரேச்சல் வசந்தி (இணைப்பேராசிரியர், மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி):
''பி.எஸ்சி., எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி எல்லாம் படிச்சது... சென்னை, பாரதி பெண்கள் அரசு கல்லூரியில. அடுத்ததா, பிட்ஸ் பிலானியில எம்.ஃபில். கார்டியாக் சயின்ஸ் படிச்சேன்.
இதுதவிர, ராமச்சந்திரா மருத்துவமனையோட டாக்டர் தணிகாசலம் வழிகாட்டுதல்களோட சித்த மருந்துகள், கொலஸ்ட்ராலை எந்தளவுக்குக் கட்டுப்படுத்துகிறது என்கின்ற ஆராய்ச்சிகள்ல இறங்கி வேலை பார்த்தேன். சித்தாவைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய முன்னோர்கள் பல அரிய மருந்துகளைக் கண்டுபிடிச்சு வெச்சிருந்தாலும், சரியா டாக்குமென்ட் செய்யல. காலப்போக்குல கலவை விகிதம் சரியா அமையாததால, சரியான ரிசல்ட் கிடைக்கல. இதனாலயே, 'இந்திய பாரம்பரிய மருந்துகள் டாக்ஸிக் (விஷத்தன்மை) கலந்தது'னு ஒரு கருத்து வெளிநாடுகள்ல உருவாயிடுச்சு. இந்த நிலையை மாத்தறதுக்கான செயல்பாடுகள்ல இறங்கினேன்.
முன்னோர்களோட மூலிகை மருத்துவத்தைப் பின்பற்றி மாத்திரை, மருந்துகள் தயாரிக்கறப்போ மருந்துக் கலவைகளோட சதவிகிதம் எந்தந்த அளவுல இருக் கணும்ங்கிறதை பலகட்ட ஆராய்ச்சிகள் மூலமா கடந்த பத்து வருஷமா கண்டறிஞ்சுட்டு வர்றேன். எல்லாத்தையும் டாக்குமென்டேஷனும் செய்றேன். இந்த அக்கறையும், ஆர்வமும்தான் விருதுக்கு காரணம்!''
சுஜாதா கபிலன் (சீனியர் பேராசிரியர், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை): ''இன்னிக்கு உலகத்தை அச்சுறுத்திக்கிட்டு இருக்கிற விஷயம், புவிவெப்ப
மயமாதல். இதுக்கு முக்கிய காரணம், மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக். இதை ஒழிக்க ஆயிரம் கோஷங்கள் போட்டாலும், பிராக்டிகலா வொர்க் அவுட் ஆகல. அதனால, பிளாஸ்டிக்குக்கு சமமான, அதேசமயம் மட்கும் தன்மையுடைய ஒரு பொருளைக் கண்டுபிடிக் கறதையே பிஹெச்.டி-யோட டாபிக்கா எடுத்துக்கிட்டேன்.
சூடோமோனாஸ் பாக்டீரியாவில இருந்து மட்கக் கூடிய பிளாஸ்டிக் தயாரிக்கறதுக்கான மூலப்பொருளை எடுக்கலாம்னு ஆய்வுல சமர்பிச்சேன். கார்பன் மூலக்கூறுகள் அதிகம் இருக்கற அந்த பாக்டீரியாவுல இருந்து எடுக்கப்படற பாலிமர்கள், எளிதில் மட்கிப்போகக் கூடியவைங்கறதையும் நிரூபிச்சேன். மட்கக்கூடிய பிளாஸ்டிக், பொதுமக்கள் புழக்கத்துக்கு வர்றதுக்கு அரசாங்கத்தோட இந்த விருது பரிந்துரைக்கும்னு நம்பறேன்!''
ஜெய்தீப் மகேந்திரா (உதவிப் பேராசிரியர், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை):

''
பிஹெச்.டி. ஆராய்ச்சி மூலமா மக்களோட கவனத்துக்கு வராத, ஒரு மருத்துவ உண்மையை வெளியில கொண்டு வரணும்னு நினைச்சேன். அப்படித்தான் 'ஈறு நோய்க்கும் இதய நோய்க்கும் தொடர்பு இருக்கிறதுங்கற டாபிக்கை தேர்ந்தெடுத்தேன். கிட்டதட்ட இருநூறு இருதய நோயாளிகளை சந்திச்சேன். பல நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினேன். ரத்தக்குழாயின் உட்புறம் லேசான படிமானங்கள் ஏற்படறதுக்கு, பல் மற்றும் ஈர்ல சேர்ற அழுக்குகளும் பிரதான காரணம். அதனால பற்களை சரியா பராமரிக்காததும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்ல ஒண்ணுங்கறதை ஸ்டடடி பண்ணி சமர்ப்பிச்சேன்.
'இந்தியாவிலேயே பல் மருத்துவத்துல முனைவர் பட்டம் வாங்கின முதல் பெண்ங்கற பெருமையும், அரசோட விருதும் கிடைச்சுருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.''
டாக்டர் மைதிலி (விஞ்ஞானி, ஃபிசிக்கல் மெட்டலார்ஜி டிவிஷன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், கல்பாக்கம்):
''திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல எம்.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் படிச்சேன். சென்னைப் பல்கலைக்கழகத்துல பிஹெச்.டி. முடிச்சேன். கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துலயே வேலைங்கறதால... அந்தத் துறையிலதான் என் ஆராய்ச்சி அமைஞ்சுது.
அணு உலைகள்ல துருவேறாத எஃகு, தூய டைட்டானியம்னு பயன்படுத்துறாங்க. அரிமானத்தை தடுக்கற தன்மை இதுல குறைவா இருக்கறதால, அந்தத் தன்மை இன்னும் அதிகமா இருக்கற ஒரு பொருளை உருவாக்குற ஆராய்ச்சியில என்னையும் இணைச்சுக்கிட்டேன். இதன்மூலமா டைட்டானியக் கலவையை இப்போ உருவாக்கி இருக்கோம். இதை, நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும். இது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததான வேக அணு ஈனுலைகளுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும்.
இப்ப கிடைச்சுருக்கற விருதை என்னோட முயற்சிக்கான பாராட்டாதான் நினைக்குறேன். மேற்கொண்டு, அணு உலைகளுக்குப் பயன்படக்கூடிய, உள்ளகப் பொருள் தொடர்பான ஆராய்ச்சியில இறங்கியிருக்கேன். அதை செய்து முடிக்கும்போது நிச்சயமா அது ஒரு சாதனையா இருக்கும்.''
சல்யூட்!

நன்றி : அவள் விகடன்

February 15, 2011

play school

 மித்து இந்த 1  ஆம் தேதியிலேர்ந்து play school போக ஆரம்பிச்சுட்டா ... முதல் ரெண்டு நாள் கொஞ்சம் அழுது என்னை தேடினால். ஆனா இப்போ எல்லாம் ஸ்கூல் போகணும்ன்னு சொன்னாலே ஒரே குஷி தான்.
இந்த ரெண்டு வாரத்திலேயே நிறைய மாற்றங்கள்
கோர்வையா பேச ஆரம்பிச்சுட்டா...
பெயர் சொல்லி கூப்பிட்ட உடனே திரும்பி பாக்குறா(முன்ன எல்லாம் குறைஞ்சது நாலு தடவை கூப்டா  தான் திரும்புவா )
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரம் ஜாஸ்தி ஆகி இருக்கு ...
 
இப்டி சின்ன சின்னதா நிறைய மாற்றங்கள்
 
இது வரை நாம சொல்லி குடுத்ததை மட்டுமே பேசி செஞ்சுகிட்டு இருந்த குழந்தை இப்போ புதுசா நிறைய சொல்றப்போ,  செய்றப்போ நிஜம்மா மனசு நிறைஞ்சு போகுது  
 
 
 

January 31, 2011

ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்

குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் கழித்தோம் என்பதை விட, அதை எப்படிக் கழித்தோம் என்பதே முக்கியம். ஒருவர், தான் ஒரு உதாரணமாக இருப்பதன் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். ஏதாவது ஒன்று பொய்யானது அல்லது நடிக்கப்படுவது என்றால், அதை உடனே கண்டுபிடித்து விடுவர். அவர்கள், உன்னை நம்பி மகிழ்கின்றனர் என்றால், மிக இளம் வயதிலேயே உங்களுடன் ஒத்துழைப்பர்.
என்னுடைய மூத்த மகன் ராஜிவ் குழந்தையாக இருந்தபோது, எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பான். எங்களுக்கு மிகவும் பழக்கமான அலகாபாத்தை விட்டுப் போகும் சமயத்திலேயே, ஒரு தம்பிப் பாப்பா (சஞ்சய்) பிறந்ததும், வேறு சில மாற்றங் களும், தற்காலிகமாக அவனைப் பாதித்தது. நான் உடல் நலமின்றி இருந்தேன். அவனுடைய ரகளைகள் அதிக எரிச்சலையூட்டின. திட்டு வதால் அது மேலும் மோசமாகியது. எனவே, நான் அறிவுப்பூர்வமாக முயன்றேன். நான் அதிகமாக அவனை நேசித்தாலும், அவனுடைய கூச்சல் என் அமைதியைக் கலைக்கிறது என்றேன். "நான் என்ன செய்யட்டும். நான் அடம் பண்ணவும், அடிக்கவும் விரும்பவில்லை. அது தானாக வருகிறது...' என்றான். குழந்தைகளின் விருப்பப்படி விட்டுவிடுவது உண்மையான அன்பன்று. தேவைப்படும் போது கற்பிப்பதும், கட்டுப்பாட்டை வளர்ப்பதும்தான் உண்மையான அன்பு. ராஜிவ் பனிரெண்டு வயதிற்குக் குறைவாக இருந்தபோது, ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர், "அது ஒன்றும் துன்பம் தராது...' என்று கூறச் சொன்னார். நான், இது குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஓர் இழுக்கு என்று கருதி, முதலில் அதிக வலியும், தொந்தரவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் இருக்கும் என்று விளக்கினேன். அவனுடைய துன்பத்தை நான் ஏற்றுக்கொள்ள இயன்றிருந்தால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றிருப் பேன். ஆனால், இது முடிய õததால், அவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றேன். அழுவதும், புகார் செய்வதும் தலைவலியைத்தான் உண்டாக்கும். ராஜிவ் புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டான். "வயதானவர்களில் கூட இவனைப்
போல் ஒரு நல்ல நோயாளி எனக்கு இருந்ததில்லை...' என்றார் மருத்துவர்.
— இந்திரா காந்தி தன், "ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்' என்ற சுயசரிதை நூலிலிருந்து...

January 25, 2011

தமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை

இப்போ தமிழ் நாட்ல நல்ல வருமானம் தருகிற தொழில்னா அது  தனியார் பள்ளி துறை தான் . அந்த அளவுக்கு பள்ளிகளின் எண்ணிகையும், கட்டணமும் உயர்ந்து ,தரம் அதல பாதளத்துக்கு போய்கிட்டு இருக்கு...
தமிழக பள்ளிகளை  அதன் பாடத்திட்டங்கள் அடிப்படையில் பிரிக்கலாம்
1 . Metriculation /மாநில கல்வி பாட  திட்டங்கள் ( State  Board ) -தமிழக அரசால் நடத்தபடுவது 
2 .CBSC ( Central Board of School Education )எனப்படும் மத்திய அரசாங்கத்தால்  நடத்தபடுவது
 
இதை தவிர
 
3 .இந்திய ஆங்கில கலப்பு கல்வி முறை 
4 .ISCE எனப்படும் Indian School Certificate முறை ....
ஹப்பா இப்போவே கண்ணை  கட்டுதே....

BPA Free

 இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தண்ணீர் பாட்டில்களில் BPA  Free  என்னும் அடையாளங்களை பார்க்கலாம் .
என்ன இந்த BPA ?
BPA  எனப்படும் bisphenol A  வேதிப்பொருள் கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்,மழலையர்களுக்கான பீடிங் பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவை தயாரிக்க உபயோகப்படுகின்றது . மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
இதுக்கு இப்போ என்னனு கேக்குறீங்களா?
 
இந்த பாட்டில்லே  தண்ணீ குடிக்கிறதால குழந்தைகளுக்கு அதிலும் பாட்டில் நிறைய பயன்படுத்தும் பள்ளி குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான சத்திய கூறுகளை அதிகபடுத்துது.
அது மட்டும் இல்லாம இப்போ குழந்தைகளிடையே ஒரு பெரிய பிரச்சனையான "Obesity " கிற உடல் எடை பிரசையும் இதனால அதிகரிக்கும்  அப்டின்னு 2008  ல நடந்த ஆய்வுல கண்டுபிடிச்சு  இருக்காங்க.
அது மட்டும் இல்லாம 2010  ல Tufts University Medical School  ல நடந்த ஆய்வின் படி இந்த BPA  புற்று நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிதாம் ...
 
அதுனால இனிமே குழந்தைக்கு  பாட்டில்  வாங்கும் போது பாட்டில் பின்னாடி  ஒரு முக்கோணத்துல போட்டு இருக்கிற நம்பர் பாத்து வாங்கணும்.
 
 
3 ,7  -BPA கண்டிப்பாக இருக்கும் -தவிர்க்கவும் 
1 ,2 , 4 ,5  மற்றும் 6  எண் கொண்ட பாட்டில்கள் வாங்க தகுதியானவை ...   

January 20, 2011

ரா. கி. ரங்கராஜன்

 ரா. கி. ரங்கராஜன் அவர்களின் "காதல் கதைகள்"  புத்தகம் படித்தேன். காதலை கூட இத்தனை விதமாக இத்தனை  நகைச்சுவையாக சொல்ல முடியும் என்பதற்கு அழகான உதாரணம் ... அதுவும் "விஸ்கி ஒரு பெக்",கோவாச்சி போன்ற கதைகள் நம்மை சுற்றி நம்மை அறியாமலே நடந்து கொண்டு இருக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு ....
இவரது "ட்விஸ்ட் கதைகள்" ," கண்ணா பின்னா  கதைகள்" எல்லாமே வெகு அற்புதம் ...  

January 13, 2011

நுனிப்புல் மேய்ந்த கதை-2010

 2010 வலையுலகம் மூலம் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது . அதே போல நிறைய நண்பர்களும்  அறிமுகம் ஆனார்கள்...
போன வருடம் முழுதும் நான் மேய்ந்ததில்  சிலவற்றை அசை போடுகிறேன்  
என் அம்மு வுக்காக நிறைய தேடி தேடி படித்தேன் . அதில் எனக்கு  பிடித்த சில
1 . பேரெண்ட்ஸ் கிளப் - இது என்னை போன்ற இளம் தாய்மார்களுக்கு மிக உபயோகமான வலை பூ.. அதிலும் புதுகை தென்றல்  அவர்களின் குழந்தை வளர்ப்பு குறிப்புக்கள் ரொம்ப நல்லா இருக்கு...  http://parentsclub08.blogspot.com/
 
2 .http://www.montessorimom.com/- நாலைந்து வருடங்களாகவே எனக்கு Montissori  முறை கல்வி மீது ஆர்வம் இருந்தது . அவ்வபோது படிப்பதும் தெரிந்து கொள்வதுமாக  இருந்த எனக்கு இந்த தளம் மிக பிடித்தது... வீட்டிலேயே குழந்தைகளை பழகும் முறைகளை பற்றியும் , சில விளையாட்டு முறைகளும் நன்றாக இருக்கின்றன
 
3 .babycenter : இந்த தளம் என் கர்ப்ப காலத்திலேர்ந்தே எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்து இருக்கிறது. கர்ப்பம் உறுதி ஆனவுடன் முதல்ல செஞ்ச வேலை இந்த தலத்தில் சேர்ந்தது தான் . இதில் காட்டி உள்ள படங்கள்/விஷயங்கள்  நிஜமாவே நம் கருவின் வளர்ச்சியை கண் முன்னே காட்டும் .
 
4 .. எனக்கு முதல் முதல் அறிமுகமான வலை பூ -http://ammakalinpathivukal.blogspot.com/   நிறைய அம்மாக்களின் சொந்த கதை, நொந்த கதை எல்லாம் ரொம்ப சுவாரசியம் .... தெரிந்து கொள்ளவும்  நிறைய..... 
 
5 .    அப்புறம் என் சமையல்அறையை சுவை மிக்கதாகிய முக்கிய தளம் 
அறுசுவை.காம்   - சமையல் குறிப்புகள் மட்டும் அல்ல .. அழகு குறிப்புக்கள் , கைவினை  கதைகள்  இப்படி நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு
 
6 . என்னுடைய முக்கியமான பொழுது போக்கு பாட்டு கேட்பது , அதுவும் கொஞ்சம் பழைய பாட்டு , கிராமிய பாட்டு ன்னா ரொம்ப இஷ்டம் ...அதுனால இந்த வலை பூ என்னை ரொம்பவே கவர்ந்தது ..அதுவும் இல்லாம நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்த சில பட்டுகளை இதுல பார்த்தப்போ ரொம்ப ................ சந்தோஷமா இருந்துச்சு  .http://moganaraagam.blogspot.com/
 
7 .  எனக்கு பாலகுமாரன் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது நன் கல்லூரி படிக்கும் போது. அதன் பின் நிறைய கதைகள் படித்து விட்டேன் .. அவருடைய நிறைய கருத்துக்கள் நிஜமாகவே மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து கிடக்கின்றன ..." மெர்குரி பூக்களும் " , இரும்பு குதிரைகளும் ,திருமணம் ஆன என் தோழிக்கும் என்னுள் அளித்த மாற்றங்கள்  பல பல ... அவரின் கருத்துக்கள் அடங்கிய வலை பூ இது
 
 8 .அப்புறம் முல்லையின் சித்திரகூடம் (பெயரை போல கருத்துக்களும் புதுமை ),Dr .ராஜ்மோகன் அவர்களின் குழந்தை நலம் ,Dr .ருத்ரன் அவர்களின் வலை பூ, Dr . ஷாலினி அவர்களின் வலை பூ,வால் பையன்(இவரது பெயரில் உள்ள குறும்புத்தனம் எழுத்துகளிலும் ...)  .. இப்படி என்னை ஈர்த்தவர்கள் ஏராளம் ....
 
9 .   அப்புறம் இந்த வருஷம் தான் என் செல்ல மிதுக்காக நானே ஆரம்பித்த இந்த வலை பூ .... 
 
இன்னும் பிடித்த தளங்களும் , வலை பூக்களும் நிறைய  இருக்கின்றன..மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன் ..... 
 

January 10, 2011

பிள்ளையார்

நான் முதல் வகுப்பு சேந்தப்போ அக்கா எனக்கு முதல் முதல்ல சொல்லி தந்த பாட்டு இது ....
எப்போ எங்க பிள்ளையார் பார்த்தாலும் கொழுக்கட்டையும் ,இன்னும் நல்ல தமிழ் படிக்கணும்கிற ஆசையும் இந்த பாட்டு தரும்
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
 
மிதுக்கு சீக்கிரம் இந்த பாட்டு சொல்லி தரனும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன் . இப்போ தன அவ சாமி முன்னால ஓம் ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கா  

January 9, 2011

ஈசி உருளை கிழங்கு சப்ஜி

 ஈசி உருளை கிழங்கு சப்ஜி
உருளை கிழங்கு -1 /4  கிலோ
சோம்பு தூள்- 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
தக்காளி- 1
கொத்துமல்லி -1  கைப்பிடி  
பச்சை மிளகாய் -2
மிளகாய்  தூள்- காரத்துக்கு ஏற்ப 
தாளிக்க:
எண்ணை
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை - 1 கீற்று
செய்முறை:
1 .உருளை கிழங்கை நன்கு வேக வைத்து சிறு சிறு துண்டாக வருமாறு    மசித்து கொள்ளவும் .
2  வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்
3 . கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம்  போட்டு,நன்கு வதக்கி பின்  தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
4 . பிறகு மசித்த கிழங்கை போட்டு சிறிது நீர் ஊற்றி நன்றாக கிளறி பின் சோம்பு தூளை சேர்க்கவும் .
5  சோம்பின் பச்சை வாசனை போகும் படி வதக்கி பின் உப்பு சேர்த்து தேவை ஆனால் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
6  பின் தேவை ஆன அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5  நிமிடம் போல் அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும் .  
7 . கிரேவி கெட்டி ஆனவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்த்து பரிமாறலாம் .
மிகவும் சுலபமாக செய்யும் இந்த கிரேவி எனக்கு அவசரத்தில் கை கொடுக்கும் . இதை califlower கொண்டும் செய்யலாம் . சப்பாத்தி மற்றும் பரத்தாக்கு ஏற்றது

என் சமையல் அறையில்

என் சமையல் அறையில் நான் படர பாட்டை இங்கே எழுத போறேன் .
கல்யாணத்துக்கு முன்னாடி   வரைக்கும் ஒரு முழு சாப்பாடு சமைச்சதே கிடையாது . சின்ன சின்ன உதவிகள்    செய்றதோட   சரி. ஆனா எப்டி சமைக்கணும் என் பிரெண்ட்ஸ் கேட்டா என்னவோ நானே சமைச்ச மாதிரி நல்லா சொல்லுவேன்  . நமக்கு  வாய் தானே  சொத்து ....?
அம்மா ரொம்ப விதம் விதமா எல்லாம் சமைக்க மாட்டாங்க ..ஆனா நல்லா சமைப்பாங்க , காய்கறி , கீரை எல்லாம் நிறைய செய்வாங்க ...அதனால அம்மா சமையல் எப்பவுமே போர் அடிச்சது கிடையாது. அதுவும் வத்தல் குழம்பு , கறி குழம்பு,குருமா  எல்லாம் ரொம்ப இஷ்டம் .  
கல்யாணத்துக்கு  அப்புறம் உடனே சிங்கப்பூர் வந்துட்டதாலே போன்ல  குறிப்பு கேக்குற பழக்கம் எல்லாம் இல்லை .. நானே தட்டு தடுமாறி  கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் . ஆரம்பத்துல சமையல் அவ்ளோ இஷ்டம் இல்லாத வேலை தான் ... ஆன  போக  போக   ரொம்ப புடிச்சி போச்சு .. இப்போ எல்லாம் எந்த நண்பர்களை பார்த்தாலும் கண்டிப்பா அவங்க சமையல் குறிப்புக்கள் கேட்காம விடறது இல்லை .
அதுனால இப்போ  யாரையாவது வீட்டுக்கு சாப்ட வாங்க ன்னு தைரியமா கூப்புடுற அளவுக்கு முன்னேறி  இருக்கேன்.
அதுல வந்த துணிச்சல் தான் இப்டி என்னை பதிவ எழுத வைக்கிது.... 
என் முதல் குறிப்பு All  time  favorite Potato  தான்  ...அடுத்த பதிவில் படிச்சு ருசியுங்க
 
பி.கு : புது வருஷத்தின் முதல் போஸ்ட்